Thursday, October 17, 2013

இதற்குத் தானே ஆசைப்பட்டாய் சச்சின் டெண்டுல்கர் ?!?!



ஓய்வு என்ற முடிவெடுத்த பின், 2 டெஸ்ட் போட்டிகள் எதற்கு என்ற எண்ணம் என் மனதிலும் எழுந்தது. 200 டெஸ்ட்கள் என்ற இலக்குக்கு வேண்டி சச்சின் ஆடுகிறார் என்பது தெளிவு! இது, சச்சின் ரெகார்டுகளுக்கு ஆடுபவர் என்று கூறுபவர்களின் வாதத்திற்கு வலிமை சேர்ப்பதாகவே உள்ளது.  உலகின் தலை சிறந்த மட்டையாளரான பிராட்மேன் 99.94 என்று அவரது டெஸ்ட் சராசரி இருந்த நிலையில், ஓய்வு பெறவில்லையா ? சச்சின் ஏன் இதை யோசிக்கவில்லை?

இது ஒரு புறமிருக்க, ஒரு 2 ஆண்டுகள் முன்னமே அவர் ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்று சிலபலர் கூறுவதிலும் அர்த்தம் இருப்பதாகவே தோன்றுகிறது.  சச்சின் தனது கடைசி 25 டெஸ்ட் இன்னிங்க்ஸ்களில், ஒரு சதம் கூட அடிக்கவில்லை, 4 ஐம்பதுகள், சராசரி 30.04, அதாவது அவரது மொத்த சராசரியை (53.86) விட 24 ரன்கள் குறைவு! இதை, மும்பையைச் சேர்ந்த மற்றொரு ஜாம்பவானின் புள்ளி விவரங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இன்னும் தெளிவு கிடைக்கும்.  கவாஸ்கர், தனது கடைசி இன்னிங்க்ஸில், பந்து நர்த்தனமாடிய ஒரு square turning பங்களூர் ஆடுகளத்தில், பாகிஸ்தானின் மிகச் சிறந்த 3 சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக மிகத் திறமையாக விளையாடி 96 ரன்கள் எடுத்தார். இந்தியா தோற்றது என்பது வேறு விஷயம்!  கடைசி 25 டெஸ்ட் இன்னிங்க்ஸ்களில், கவாஸ்கர் எடுத்தது, 4 சதங்களும், 6 ஐம்பதுகளும், சராசரி 58 ரன்கள் !!!

கிரிக்கெட் மேதையான சச்சின், ஏன் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக, தன்னை இவ்வாறு வதைத்துக் கொள்ள வேண்டும் !?  அவர் லெவலுக்கு, வயதுக்கு எதிரான அந்த ஜீவமரண போராட்டம் பார்க்க சகிக்காமல் இருந்தது. கிரிக்கெட்டின் மேல் கொண்ட காதல் தான் காரணம் என்று நினைக்கிறேன்.  தனது ஃபார்ம் திரும்பி விடும் என்ற அவரது எதிர்பார்ப்பும் ஒரு காரணமாக இருக்கலாம்! ஆனால், இளமை திரும்புவதில்லை என்பதை சற்று மறந்து விட்டார்.  28 வயதில் சுலபமாக கை கூடியவைகளை 38-ல் கை கூட வைக்க சச்சினால் கூட இயலாது என்பது தான் யதார்த்தம்.  Sachin should have gone in a blaze of glory for the ultimate cricket genius  he is, but sadly that did not happen.  அவரது கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்தாலும், கடைசி 2 ஆண்டுகளில், சாமானிய பந்து வீச்சாளர்களிடமெல்லாம் போராடிய சச்சினின் இமேஜ் மனத்திரையில் விலக மறுக்கிறது. 

சமகாலத்தில் விளையாடிய (சச்சினுக்கு நிகரானவர் என்று சொல்லத்தக்க!) லாராவின் (கடைசி 25 இன்னிங்க்ஸ்கள்) புள்ளி விவரங்கள் பிரமிக்க வைப்பதாக உள்ளது. அவரது சராசரி 45 ரன்கள் என்பதை விட, தனது கடைசி வருடத்தில் லாரா, இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா என்ற பலமான அணிகளுக்குக் எதிராக, 2 சதங்களும், 2 இரட்டைச்சதங்களும் எடுத்தார்.  அதாவது, ஓய்வு பெறும் வரையில், லாராவின் ஒளிக்கீற்று பிரகாசமாகவே எரிந்தது! சச்சின் போன்ற ஒரு மேதை, கலைஞர் என்ற நிலையிலிருந்து கணக்காளராக மாறி விட்டது, அவரது பரம் விசிறிகளுக்கு சற்று வருத்தமான விஷயமே. விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டைலில் ஆரம்பித்தவர், இப்படி பாய்காட் போல சர்வைவலுக்காக போராடும் நிலைக்கு தள்ளப்பட்டது அதை விட வருத்தமான விஷயமே!

கபில்தேவும் ஹாட்லியின் பந்து வீச்சு ரெகார்ட்டை முறியடிக்க, பரிதாபமாக மூச்சிரைக்க பந்து வீசிய அந்த கடைசி டெஸ்ட்கள் ஞாபகத்திற்கு வருகிறது. முரளிதரன் அந்த ரெகார்டை கபளீகரம் பண்ணி விட்டு, இலக்கை எங்கோ எடுத்துச் சென்று விட்டார் என்பது வேறு விஷயம்!  இப்போது, சச்சின் தனது விருப்பப்படி (இந்திய மண்ணில்) ஓய்வு பெறுவதற்காக, தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் சுருக்கப்பட்டு விட்டது. இதற்கு முன்னால், யாருக்காகவும் இப்படி நடந்ததாக ஞாபகமில்லை! வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான டெஸ்ட் தொடரை விட (வலிமையான அணிக்கு எதிரான) தென்னாப்பிரிக்கத் தொடர் மிக மிக முக்கியமானது.  சச்சின் ஓய்வு பெற்றிருந்தால், இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரே நடைபெற்று இருக்காது என்பது தான் யதார்த்தம்.  மும்பையில் தான் ஓய்வு என்று சிறுபிள்ளை போல ஏன் இந்த பிடிவாதம் என்றும் புரியவில்லை!?

- எ.அ.பாலா

பிகு: 24 வருடங்களாக, நான் சச்சினின் பரம விசிறி. அவரது 90% ஆட்டங்களை நேரில் அல்லது டிவியில் ரசித்து வந்திருக்கிறேன்.

3 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

test comment

திண்டுக்கல் தனபாலன் said...

ம்... ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்து விட்டது... ஒரு சிறந்த வீரருக்காக இவ்வாறு நடப்பது உலகத்தில் எங்கும் இல்லை... இனி மேலும் இருக்கப் போவதில்லை....

Unknown said...

கடவுள் ஒய்வில் செல்கிறார்.

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails